Tuesday, January 25, 2011

இந்தியர்களின் கறுப்புப் பண விவரங்கள்: வெளியிடுமா மத்திய அரசு?

டெல்லி: வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது மற்றும் இதுவரை கிடைத்துள்ள தகவல்களை வெளியிடும் விஷயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

ஸ்விட்சர்லாந்து, மெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாடுகளில் பல லட்சம் கோடி அளவுக்கு கறுப்பு பணத்தை இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளனர். இந்த வங்கி கணக்குகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் பற்றிய விவரங்களை வெளியிடவும், அந்தப் பணத்தை பறிமுதல் செய்து இந்தியாவுக்கு கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த விவகாரத்தில் சில நாடுகளிடமிருந்து இந்தியர்களின் கருப்புப் பண கணக்கு விவரங்களை இந்திய அரசு பெற்றுவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் அதை வெளியிடாதது மட்டுமல்ல, நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனம் காட்டி வருகிறது.

மத்திய அரசின் இந்தப் போக்கை சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் இந்த மெத்தனத்துக்கு கண்டனம் தெரிவித்தது. எனினும், கறுப்பு பண வங்கி கணக்குகளை மத்திய அரசு வெளியிட்டபாடில்லை. மேலும் ஜெர்மனி அரசு, தங்கள் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பண விவரங்களை வெளியிடத் தயாராக இருப்பதாக அறிவித்தும், அதற்கு இந்திய தரப்பிலிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், "வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை கொண்டு வருவதற்கு உடனடி தீர்வு எதுவும் இல்லை. வரி ஏய்ப்பு மற்றும் வரி வசூலுக்காக சில தகவல்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றிருக்கிறோம். அவற்றை பகிரங்கமாக வெளியிட முடியாது'' என்றார்.

இதுபோல மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், "சர்வதேச ஒப்பந்தங்களின் படி, சில நாடுகளில் இருந்து கறுப்பு பண வங்கி கணக்குகள் பற்றிய தகவல்களை மத்திய அரசு பெற்றுள்ளது. ஆனால், அவற்றை வெளியிட முடியாது. அப்படி வெளியிட்டால் எந்தவொரு நாடும் இத்தகைய தகவல்களை நமக்கு அளிக்காது'' என்றார்.

மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. கறுப்பு பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்றும் அதில் தங்கள் கட்சியினர் இருந்தால் தாராளமாக கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி அறிவித்தார்.

உச்ச நீதிமன்றமும், "இது வரி ஏய்ப்பு தொடர்பான பிரச்சினை மட்டும் கிடையாது.
தேசத்தின் சொத்து களவு போயிருக்கிறது. கிரிமினல் புத்தியுடன் நடந்த திருட்டாக கருத வேண்டும். நடுத்தர மக்களிடம் வரி வசூல் செய்வதில் காட்டும் கண்டிப்பையும் கறாரையும், கறுப்பு பண பதுக்கல்காரர்களிடம் காட்ட மறுப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்திவிட முடியாது" என காய்ச்சி எடுத்தது.

இந் நிலையில், கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் அதில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அறிவிக்கிறார்.

இதற்காக இன்று சிறப்பு செய்தியாளர் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment