Monday, January 17, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் அணி அறிவிப்பு-ஸ்ரீசாந்த், ரோஹித் நீக்கம்-அஸ்வினுக்கு இடம்

சென்னை: உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் ஆர்.அஸ்வின் இடம் பிடித்துள்ளார்.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ளன. பிப்ரவரி 18ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை ஏற்கனவே இந்தியா அறிவித்திருந்தது.

இந்த நிலையில், 15 பேர் கொண்ட இறுதி அணியை இன்று அறிவித்தது இந்திய அணி தேர்வுக்குழு. ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய தேர்வாளர் குழு சென்னையில் கூடி இன்று இந்திய அணி வீரர்கள் குறித்து தீவிர ஆய்வு நடத்தியது.

இதன் இறுதியில் டோணி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை ஸ்ரீகாந்த் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

இந்திய அணி விவரம்:

எம்.எஸ்.டோணி (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக், கெளதம் கம்பீர், யுவராஜ் சிங், விராத் கோலி, சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், ஜாகிர் கான், பிரவீன் குமார், முனாப் படேல், ஆசிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், ஆர்.அஸ்வின், பியூஷ் சாவ்லா.

முரளி விஜய்-திணேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு மறுப்பு
Read: In English
ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடிய முரளி விஜய்க்கு உலகக் கோப்பைப் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல திணேஷ் கார்த்திக்கும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால். அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில், டோணி மட்டுமே விக்கெட் கீப்பராக உள்ளார். 2வது விக்கெட் கீப்பர் இடம் பெறவில்லை. உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியில் 7 பந்து வீச்சாளர்கள், 6 பேட்ஸ்மென்கள், ஒரு விக்கெட் கீப்பர், ஒரு ஆல் ரவுண்டர் (யூசுப் பதான்) இடம் பெற்றுள்ளனர்

No comments:

Post a Comment