Wednesday, January 19, 2011

மத்திய அமைச்சரவையில் 3 புதுமுகங்கள் பதவியேற்பு : 28 அமைச்சர்கள் இலாகா மாற்றம்

புதுடெல்லி : ஐ.மு. கூட்டணி அரசு 2வது முறையாக பதவியேற்ற 21 மாதங்களுக்குப் பிறகு பிரதமர் மன்மோகன் சிங் முதல் முறையாக நேற்று தனது அமைச்சரவையை மாற்றி அமைத்தார். இதில், 28 அமைச்சர்களின் 37 இலாகாக்கள் அதிரடியாக மாற்றப்பட்டன. 3 புதுமுகங்கள் பதவியேற்றனர். பிரபுல் படேல், சல்மான் குர்ஷித், ஜெய்ஷ்வால் ஆகியோர் கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றனர்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசு 2009ம் ஆண்டு, மே மாதம் 2வது முறையாக பதவியேற்றது. அதன் பிறகு, ஐ.பி.எல்., ஸ்பெக்ட்ரம் விவகாரங்களில் மத்திய அமைச்சர்கள் சசி தரூர், ஆ. ராசா ராஜினாமா செய்தனர். ஆதர்ஷ் கட்டிட முறைகேடு குற்றச்சாட்டால் மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் பதவி இழந்ததை தொடர்ந்து, மத்திய அமைச்சராக இருந்த பிருத்வி ராஜ் சவான் முதல்வர் பதவியேற்றார். இதனால் மத்திய அமைச்சரவையில் ஏற்பட்ட காலியிடங்கள் அப்படியே இருந்தன. இவர்கள் வகித்து வந்த இலாகாக்கள், பல்வேறு அமைச்சர்களிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டதால் அவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டது.

இதையடுத்து, அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டார். இது பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் கடந்த திங்கட்கிழமை ஆலோசனை நடத்தி பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஐ.மு.கூட்டணித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 6 அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதில், இதுவரை தனிப் பொறுப்பு அமைச்சர்களாக இருந்த பிரபுல் படேல் (விமானப் போக்குவரத்து), ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஷ்வால் (நிலக்கரி, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம்), சல்மான் குர்ஷித் (கம்பெனி விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரம்) ஆகியோர் காபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் பிரபுல் படேலுக்கு கனரக தொழிற்துறை மற்றும் பொதுத்துறை வழங்கப்பட்டுள்ளது. ஜெய்ஷ்வாலுக்கு நிலக்கரித் துறையும், சல்மான் குர்ஷித்துக்கு நீர்வளத் துறையும், கூடுதல் பொறுப்பாக சிறுபான்மையினர் விவகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.

பெனி பிரசாத் வர்மா (உத்தரப்பிரதேசம்), அஸ்வனி குமார் (பஞ்சாப்), கே.சி. வேணுகோபால் (கேரளா) ஆகியோர் புதிய இணையமைச்சர்களாக பதவியேற்றனர். 1996 ஐ.மு. கூட்டணி அரசில் கேபினட் அமைச்சராக இருந்த வர்மாவுக்கு, இந்த முறை பதவி அளிக்கப்படாமல் இருந்தது. இப்போது, அவருக்கு தனி பொறுப்பு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

வேணுகோபால் ஆழப்புழா தொகுதியில் இருந்து முதல்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 47 வயதான அவருக்கு மின்சாரத் துறை வழங்கப்பட்டுள்ளது. அஸ்வனி குமாருக்கு திட்டம், நாடாளுமன்ற விவகாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை உள்துறை இணையமைச்சராக இருந்த அஜய் மாகென், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை தனிப் பொறுப்பு அமைச்சராக பதவியேற்றார். அதேபோல், விவசாயம், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் பதவி வகித்து வந்த கே.வி. தாமஸ், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை தனிப் பொறுப்பு அமைச்சராக பதவியேற்றார்.

இது தவிர, 28 அமைச்சர்களின் இலாகாக்கள் தடாலடியாக மாற்றப்பட்டுள்ளன. சரத் பவார், வீர்பத்ர சிங், விலாஸ்ராவ் தேஷ்முக், ஜெய்ப்பால் ரெட்டி, கமல்நாத், வயலார் ரவி, முரளி தியோரா, கபில் சிபல், ஹண்டிக், சி.பி. ஜோஷி, குமாரி ஷெல்ஜா, சுபோத் காந்த் சகாய், எம்.எஸ். கில், பவன் குமார் பன்சால் ஆகிய 14 காபினட் அமைச்சர்களின் இலாகாக்களும், தனி பொறுப்பு அமைச்சர்களில் தின்ஷா படேலின் இலாகாவும் மாற்றப்பட்டுள்ளன.

இணையமைச்சர்களில் ஹரிஷ் ராவத், நாராயணசாமி, இ. அகமது, குருதாஸ் காமத், சாய் பிரதாப், பாரத்சிங் சோலங்கி, ஜிதின் பிரசாதா, மாதவ் கே. கந்தேலா, ஆர்.பி.என். சிங், துஷார்பாய் சவுத்ரி, அருண் யாதவ், பிரதிக் பிரகாஷ்பாபு படேல், வின்சென்ட் பாலா ஆகியோரின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. நகர்ப்புற மேம்பாட்டுத் துறை பொறுப்பு வகித்து வந்த ஜெய்ப்பால் ரெட்டிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையும், இந்த துறையை ஏற்கனவே வகித்து வந்த முரளி தியோராவுக்கு கம்பெனி விவகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை இலாகா வகித்து வந்த கமல்நாத்துக்கு நகர்ப்புற மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது.

இவர் வகித்து வந்த துறை, சி.பி. ஜோஷியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு முறைகேடு குற்றச்சாட்டால் விமர்சனத்துக்கு ஆளான விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறை அமைச்சர் எம்.எஸ். கில்லுக்கு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தரப்பட்டுள்ளது. கனரக தொழில் மற்றும் பொதுத்துறை அமைச்சராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு கிராமப்புற மேம்பாட்டுத் துறையும், கூடுதல் பொறுப்பாக பஞ்சாயத்து ராஜ் துறையும் வழங்கப்பட்டுள்ளது. வயலார் ரவிக்கு விமானப் போக்குவரத்து துறை கூடுதல் பொறுப்பாக தரப்பட்டுள்ளது.

பட்ஜெட்டுக்கு பிறகு மீண்டும் மாற்றம்: பிரதமர்

அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், ‘அமைச்சரவையில் இப்போது சிறிய மாற்றம்தான் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு பெரிய மாற்றம் செய்யப்படும்’ என்றார். அமைச்சரவை மாற்றத்தில் எல்லா மாநிலத்துக்கும் பிரதிநிதித்துவம் தரப்படும், கூட்டணி கட்சிகளுக்கு கூடுதலாக சில பதவிகள் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. சட்டீஸ்கர், கோவா, மணிப்பூர் மாநிலங்களை சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இடம் பெறவில்லை.

பதவி பறிப்பு இல்லை: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், காங்கிரசில் மூத்த அமைச்சர்கள் சிலரை கட்சி பணிக்கு அனுப்ப பதவி பறிக்கப்படலாம் என செய்திகள் வெளியாயின. ஆனால், யார் பதவியும் பறிக்கப்படவில்லை. அதே போல், இலாகா மாற்றத்திலும் தமிழக அமைச்சர்கள் யாருக்கும் மாற்றம் செய்யப்படவில்லை.

81 ஆக உயர்வு

மத்திய அமைச்சரவையில் நேற்று 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்றதை தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவை எண்ணிக்கை 81 ஆக உயர்ந்தது. இதில் 35 பேர் கேபினட் அமைச்சர்கள். 6 பேர் தனி பொறுப்பு இணை அமைச்சர்கள். 40 பேர் இணை அமைச்சர்கள்.

No comments:

Post a Comment