Tuesday, January 11, 2011

விலைவாசி உயர்வு: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

புது தில்லி, ஜன.11: விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியன குறித்து பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை நடத்தினார். விலைவாசியைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம், சரத் பவார், திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் புதன்கிழமையும் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது.

டிசம்பர் 25-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உணவுப் பணவீக்கம் 18.32 சதவீதமாக உயர்ந்தது. வெங்காயம், பால், இறைச்சி ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. விலைவாசியைக் கட்டுப்படுத்தி பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

வெங்காயத்தின் விலையைக் குறைக்க இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் வெங்காயத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதேயன்றி பழைய நிலைக்குத் திரும்பவில்லை. மூன்று வாரங்களில் வெங்காயம் குறையும் என்று அரசு அறிவித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் வெங்காயத்தின் விலை குறைந்தபாடில்லை.

காய்கறிகளின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு ஏதும் செய்ய இயலாது என்று வேளாண் அமைச்சர் சரத் பவார் திங்களன்று கருத்து தெரிவித்திருந்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் விற்பனைக்கு வந்ததால் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை | 50 முதல் | 55 வரை விற்கப்பட்டது. பாகிஸ்தானின் உள்நாட்டு தேவைக்கு வெங்காயம் தேவைப்படுவதால் இப்போதைக்கு பாகிஸ்தானிலிருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment