Wednesday, January 19, 2011

சென்னை துறைமுக மேம்பாட்டிற்கு ரூ.10,000 கோடி : அமைச்சர் ஜி.கே.வாசன் தகவல்

சென்னை : ""சென்னைத் துறைமுகத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 10 ஆயிரம் கோடி ரூபாயில், மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது,'' என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார். சென்னை - எண்ணூர் துறைமுகங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டும், கனரக வாகனங்கள் வந்து செல்ல வசதியாக சென்னை - எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலைகளை, 600 கோடி ரூபாயில் விரிவாக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கின. பல்வேறு சிக்கல்களால் எட்டாண்டுகளாக கிடப்பில் போன இந்த திட்டத்திற்கு புத்துயிர் கிடைத்துள்ளது.


முதற்கட்டமாக, 254 கோடி ரூபாயில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பணிகள் துவக்க விழா திருவொற்றியூரில் நடந்தது. மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், திட்டப் பணிகளைத் துவக்கி வைத்து பேசியதாவது: வடசென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சென்னைத் துறைமுகத்திலிருந்து சரக்குகளை தாமதமின்றி, விரைவாக வெளியேற்ற முடியும் என்பதோடு, தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கும், ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் பெருகவும் இத்திட்டம் பயனுள்ளதாக அமையும். கப்பல் அமைச்சக முயற்சியால், இந்திய துறைமுகங்களின் சரக்குகள் கையாளும் திறன் வேகமாக உயர்ந்து வருகிறது. நமது துறைமுகங்கள் உலக அளவில் தலைசிறந்ததாக உயர, இது போன்ற திட்டங்கள் அவசியம்.


தற்போது 6.1 கோடி டன்களாக உள்ள சென்னைத் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன், 10 ஆண்டுகளில் இது 14 கோடி டன்னாக உயரும். இதை கருத்தில் கொண்டு, சென்னை மெகா கன்டெய்னர் முனையம், கார் ஏற்றுமதிக்கு "ரோ-ரோ மையம்', ஸ்ரீபெரும்புதூரில் உலர் துறைமுகம், மதுரவாயலிலிருந்து சென்னைத் துறைமுகத்திற்கு நான்கு வழிச்சாலை உட்பட 29 திட்டங்கள், 10 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


எண்ணூர் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, திருவொற்றியூர் நகராட்சியிடமிருந்து நீண்ட கால குத்தகைக்கு பெறப்பட்டுள்ள 11 ஏக்கர் இடம், கன்டெய்னர் டிரெய்லர்கள் நிறுத்துமிடமாக மேம்படுத்தப்படும். ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, மத்திய ரயில்வே அமைச்சரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை - எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலை திட்டப் பணிகள் இரண்டாண்டுகளுக்குள் முடிக்கப்படும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு பல்வேறு வகையில் உதவி வருகிறது. இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.


மாநில அமைச்சர்கள் சாமிநாதன், சாமி, இளங்கோவன் எம்.பி., நெடுஞ்சாலைத்துறைச் செயலர் சந்தானம், துறைமுகத் தலைவர்கள் அதுல்ய மிஸ்ரா (சென்னை), வேலுமணி (எண்ணூர்) உட்பட பலர் பங்கேற்றனர்.


சென்னை மீன் பிடி துறைமுக மேம்பாட்டிற்கு ரூ.120 கோடி : வடசென்னை எம்.பி., இளங்கோவன் பேசும் போது, ""சென்னைத் துறைமுகத்தை 2,500 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து மேம்படுத்துகிறீர்கள். அருகே உள்ள மீன் பிடி துறைமுகத்தை மேம்படுத்த 120 கோடி ரூபாய் போதும். மத்திய அமைச்சர் வாசன், மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். இவ்வாறு அவர் கோரிக்கை வைத்தபோது இடைமறித்த வாசன், ""உங்கள் கோரிக்கை ஏற்கப்படும்; மீன் பிடி துறைமுகம் மேம்படுத்தப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment