Monday, July 16, 2012

சி.சு.வும், ப.சி.யும் ஒண்ணுதான்... ஈவிகேஎஸ் இளங்கோவன் கிண்டல்!


சென்னை: காங்கிரஸ் கட்சியில், காமராஜர் காலத்திலிருந்தே கோஷ்டிப் பூசல் இருந்து கொண்டுதான் உள்ளது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியமும், பக்தவச்சலமும் தனி கோஷ்டிகளாகத்தான செயல்பட்டனர். சி.சு.வுக்கு தொண்டர்கள் செல்வாக்கு இல்லை, இப்போது இருக்கும் ப.சிதம்பரத்திற்கும் அதேபோல தொண்டர்கள் ஆதரவு கிடையாது என்று பேசியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
காமராஜர் ஆட்சி தேவை என்று ஒரே குரலில் பேசாமல் ஆளாளுக்கு ஒரு குரலில் பேசி வரும் காங்கிரஸார் நேற்று சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் பிறந்த நாளை கொண்டாடினர். அப்போது காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல் குறித்து சிறப்புரை ஆற்றினார் இளங்கோவன்.
அப்போது அவர் பேசுகையில்,
கோஷ்டி வைத்து அரசியல் நடத்துவதற்கு தகுதியும், திறமையும் வேண்டும். ராஜாஜி, சத்தியமூர்த்தி காலத்திலிருந்து கோஷ்டி அரசியல் இருக்கிறது. ஆனால் அப்போது, அந்த கோஷ்டி அரசியல் கட்சியின் வளர்ச்சியைப் பாதிக்கவில்லை.
காமராஜர் இருக்கும்போதும் கோஷ்டி அரசியல் இருந்தது. பக்தகவச்சலம் ஒரு கோஷ்டியாக இருந்தார், சி.சுப்பிரமணியம் இன்னொரு கோஷ்டியாகச் செயல்பட்டார். இப்போது இருக்கும் உள்துறை அமைச்சரைப்போல சி.சுப்பிரமணியமும் மத்திய அரசில் அப்போது முக்கியமானவராக இருந்தார். ஆனால், தொண்டர்களிடம் அவருக்கு இவரைப் போலவே மரியாதை இருக்கவில்லை. அதிகாரிகள் மத்தியில் நல்ல மரியாதை இருந்தது.
ஆனால் சி.சுப்பிரமணியத்தையும், பக்தவத்சலத்தையும் காமராஜருடன் ஒப்பிட முடியுமா? அவர் மக்கள் தலைவர். இவர்கள் வெறும் அரசியல் தலைவர்கள், அவ்வளவே...
கடந்த வாரம் பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் பார்த்தேன். வடசென்னைக்கு வருகை தரும் தலைவா வருக, வருக என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் வடசென்னையில் எங்கே விழா நடக்கிறது என்று சொல்லவில்லை. என்ன விழா என்றும் அறிவிக்கவில்லை. காது குத்து விழாவா, வயதுக்கு வந்த விழாவா, கல்யாணமா என சொல்லச் வேண்டாமா? போஸ்டர்கள் அடிப்பதாலும், பேனர்கள் வைப்பதாலும், வழிநெடுக ட்யூப்லைட் போடுவதாலும் பெரிய தலைவர்களாகிவிட முடியாது என்பது சிலருக்குப் புரிவதில்லை.
ஜெயந்தி நடராஜனுக்கு குட்டு
காங்கிரஸில் சிலர், தொணடர்கள் பலம் இருப்பதுபோல பூச்சாண்டி காட்டுகிறார்கள். அதைக் கண்டு பயப்படாதீர்கள். காங்கிரஸில் பல்வேறு கோஷ்டிகள் இருந்தாலும் பெண்மணிகள் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றனர். அவர்கள் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்கள். புகைப்படங்களில் தலையைக் காட்டுவதற்காக அல்லிராணியாக வலம் வருகின்றனர்.
அமைச்சராகிவிட்டால் தாங்கள்தான் எல்லாம் என்பதுபோல செயல்படுகின்றனர். தமிழகத்துக்கு வந்தால் தலைவர்களைச் சந்திப்பதில்லை. மகளிரணியினரைக் கூட சந்திப்பதில்லை. அதனால் எம்.எல்.ஏ.க்களும் அவர்களை சட்டை செய்வதில்லை.
திமுகவில் அண்ணன் தம்பிச் சண்டை
கோஷ்டிப் பூசல் காங்கிரஸில் மட்டுமில்லை. மற்ற கட்சிகளிலும் இருக்கிறது. ஒரு கட்சியில் அண்ணன்- தம்பி சண்டை வெளிப்படையாக நடக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சியில் ஜாதிப் பூசல்
ஒரு பொதுவுடைமைக் கட்சியில் ஜாதிப் பூசல் இருக்கிறது. ஒரு ஜாதிக் கட்சியில் குரு, சிஷ்யன் சண்டை. எனவே காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசல் பற்றிப் பேச இவர்களுக்கு தகுதியில்லை.
காமராஜரைக் கேலி பேசியவர்கள், மோசமாக ஆட்சி செய்கிறார்கள். முதல்வர் கொடநாட்டிலிருந்து 18-ம் தேதி மாலையில் வருவார் என்கின்றனர். அவரோ அண்ணாசாலையில் குப்பை இருந்தால்கூட அதை அகற்ற பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். என்னால் ஆட்சி செய்ய முடியவில்லை என்று கடிதம் எழுதுங்களேன். அதற்கு உடனடியாகப் பதில் கிடைக்கும்.
திராவிடக் கட்சிகள் காலை வாரும் கட்சிகளாகத்தான் இருக்கின்றன. புதிதாக வளர்ந்து வருபவர்களும் அதே பாணியில்தான் இருக்கிறார்கள். தமிழகத்துக்கு விடிவு காலம் காங்கிரசால் மட்டுமே அமையும் என்றார் இளங்கோவன்.

No comments:

Post a Comment