Wednesday, July 18, 2012

மம்தாபானர்ஜி ஆதரிப்பதால் பிரணாப் முகர்ஜிக்கு 7 லட்சம் ஓட்டு கிடைக்கும்


ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜியும், பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளராக பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகிறார்கள். பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்கின்றன. 

காங்கிரசுக்கு அடுத்தப்படியாக அந்த கூட்டணியில் உள்ள 2-வது பெரிய கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் நேற்று தனது சஸ்பென்சை உடைத்து பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக தெரிவித்து உள்ளது. இது தவிர மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கின்றன. 

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் ஆதரவு கொடுக்கிறது. தேசிய ஜன நாயக கூட்டணியைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா கட்சிகளும் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கின்றன. பிரணாப் முகர்ஜி வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பதன் மூலம் அவருக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைக்கும். 

ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 776 எம்.பி.க்களும், 4120 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப் போடுகிறார்கள். மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகள் மதிப்பிடப்படுகின்றன. அதன்படி மொத்தம் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 5,49,408 ஆகும். 

அனைத்து மாநில எம்.எல்.ஏ.க்களின் மொத்த ஓட்டு மதிப்பு 5,49,474 ஆகும். இரண்டையும் சேர்த்தால் ஜனாதிபதி தேர்தலில் பதிவாகும் மொத்த ஓட்டுக்களின் மதிப்பு 10,98,882, இதில் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றிக்கு 5,49,442 ஓட்டுகள் தேவை. ஆனால் பிரணாப் முகர்ஜி இதைவிட கூடுதல் ஓட்டுகள் பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். 

திரிணாமூல் காங்கிரசும் ஆதரிப்பதால் சுமார் 7 லட்சம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அவருக்கு மொத்தம் 52.9 சதவீகித ஓட்டுகள் கிடைக்கும். அதே சமயம் பி.ஏ. சங் மாவை பாரதீய ஜனதா, அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் மட்டும் ஆதரிப்பதால் அவருக்கு 3,04,785 ஓட்டுகள் கிடைக்கும். இது 34 சதவீத ஓட்டுகள் ஆகும். தேர்தலை புறக்கணிக்கும் கட்சிகள், முடிவு அறிவிக்காத சிறிய கட்சிகளிடம் 13 சதவித ஓட்டுகள் உள்ளன.

No comments:

Post a Comment