Saturday, February 8, 2014

இலங்கை கடற்படை அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இல்லாததே, தமிழக மீனவர்கள் கைதுக்கு காரணம்! மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தகவல்!!

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் அந்நாட்டு கடற்படை இல்லை என்பதால்தான் தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கூறினார்.
தூத்துக்குடியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் செய்தியாளாகளை சந்தித்தார். அப்போது, மத்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையால், இந்திய - இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.சென்னையில் நடந்த முதல்கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டு, அந்த முடிவுகளை இருநாட்டு அரசுகளும் பரிசீலனை செய்து ஒத்த கருத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன. மேலும், 2-ம் கட்ட பேச்சுவார்த்தையை கொழும்பில் நடத்துவது எனவும், அதுவே நிறைவு தரும் பேச்சாக அமையும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இலங்கை கடற்படை அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இல்லாததால் மீண்டும் இரண்டு முறை தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர் பேச்சுவார்த்தை நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கும்போது இதுபோன்ற நடவடிக்கை சுமுகத் தீர்வுக்கு இடையூறாக அமையும் என்று தெரிவித்த அவர், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றும், இது மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதால் எச்சரிக்கையுடன், அதேநேரத்தில் வலுவான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

வரலாறே தெரியாதவர் மோடி: குஜராத் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி கடும் தாக்கு

குஜராத் மாநிலம் பர்டோலியில் இன்று நடந்த காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில், கட்சியின் பிரச்சாரக் குழு தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

வரலாறே தெரியாதவர்கள் குஜராத்தை ஆட்சி செய்கிறார்கள். காந்தி, வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்களைப் பற்றி குஜராத் தலைவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விஷத்தன்மை கொண்ட அமைப்பு என்று வல்லபாய் பட்டேல் கூறியிருந்தார். ஆனால், பட்டேலைப் பற்றி எதுவும் தெரியாத மோடி இப்போது அவரது சிலையை அமைக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தமே காந்தி கொலைக்கு காரணம்.

நாட்டின் ஒற்றுமை பற்றி பேசுவதற்கு பா.ஜனதாவுக்கு தகுதியில்லை. கடந்த 9 ஆணடுகளாக குஜராத்தில் லேக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை. குஜராத்தில் அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 55 ஆயிரம் சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.

ஊழல் எதிர்ப்பு குறித்து பேசும் பா.ஜனதா ஊழலுக்கு எதிரான மசோதாக்களை தடுக்கிறது. குஜராத்தில் சிறைக்குச் சென்றவர்களே அமைச்சர்களாக வருகின்றனர்.

விவசாயிகளுக்காகவும், அவர்களின் விளைநிலங்களுக்காகவும் போராடிய கட்சி காங்கிரஸ். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ். இந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் 10 தகவல் ஆணையர்கள் இருக்க வேண்டும். குஜராத்தில் ஒரு ஆணையர்தான் உள்ளார். அதுவும் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Wednesday, February 5, 2014

பல்லாவரத்தில் கெஜ்ரிவாலை கண்டித்து காங்கிரஸ் நூதன போராட்டம்: .கொடும்பாவி எரிப்பு

தாம்பரம், பிப். 4–
நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்கட்சிகள் மற்றும் மத்திய மந்திரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிய ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பல்லாவரம் பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.
செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.செந்தில்குமார், சக்கரபாணி ரெட்டியார்,  தாம்பரம் நகர தலைவர் மணி,  C K மூர்த்தி  ரூபி மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
முன்னதாக எருமை மாட்டின் மீது கெஜ்ரிவால் போட்டோவை ஒட்டி பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து ஆர்ப்பாட்டம் நடந்த மேடை வரை காங்கிரசார் கொண்டு வந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, மூர்த்தி, நாராயணன்,  உள்பட 2300–க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். கெஜ்ரிவால் உருவ பொம்மையையும் எரித்தனர்.