Sunday, December 29, 2013

சிறுபான்மையினருக்கு அரணாக மத்திய காங்கிரஸ் அரசு விளங்குகிறது: கிறிஸ்மஸ் விழாவில் ஜி.கே.வாசன் பேச்சு

குமரி மாவட்டம் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 16–வது கிறிஸ்துமஸ் விழா 
நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே. வாசன் கலந்து கொண்டு கலாச்சார விழா மற்றும் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற பொது கூட்டத்திற்கு இயக்க தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். இயக்க துணைத் தலைவர் கிறிஸ்து ராஜ் வரவேற்றார், குமரி தென்னிந்திய பிரதம பேராயர் தேவ கடாட்சம், கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார்பவுலோஸ், தக்கலை மறைமாவட்ட ஆயர் மார்ஜார்ஜ் ராஜேந்திரன், ஆயர் ஏசுதாஸ், பெந்தேகோஸ்தே கூட்டமைப்புத் தலைவர் தேவசுந்தரம் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே. வாசன் கலந்து கொண்டு பேசியதாவது:–
கிறிஸ்தவ சமுதாயம் உலகம் முழுவதும் அன்பை போதித்து வருகிறது. இந்தியாவில் கல்வி வளர்ச்சி, பொருளாதார ஏற்றம் ஆகியவற்றில் கிறிஸ்தவ சமயத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. நான் கல்வி பயின்றது சென்னையில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் தான். இன்று முக்கிய நகரங்கள் உட்பட இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் கிறிஸ்தவர்களின் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனைகள் என நிறுவனங்கள் இல்லாத இடமே கிடையாது. கிறிஸ்தவ பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் சிறந்த ஒழுக்கம் மிக்கவர்களாக, சிறந்த தலைவர்களாக உருவாகி வருகின்றனர்.
மத்திய காங்கிரஸ் அரசு பிற்படுத்தப்பட்ட, பின்தங்கிய, சிறுபான்மையின மக்களுக்கு பலகோடிகணக்கான திட்டங்களை செயல்படுத்தி அவர்கள் பாதுகாப்பாக வாழ வழிவகுக்கிறது. காங்கிரஸ் அரசை தவிர வேறு எந்த அரசாலும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது, சிறுபான்மையினருக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தியது இந்த காங்கிரஸ் அரசு தான் என்பதை யாரும் மறக்க முடியாது.
நான் சார்ந்திருக்கின்ற அரசு நாளைய தினம் வேற்றுமைகளை உருவாக்கக் கூடிய மதவாத சக்திகளை தலை தூக்க விடாமல் தடுக்கும். எனவே காங்கிரஸ் அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹெலன் டேவிட்சன், ராமசுப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ஜான்ஜேக்கப், விஜயதரணி, புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தகுமார், விடியல்சேகா, குமாரதாஸ், கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர் கிளாடிஸ் லில்லி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

No comments:

Post a Comment