Sunday, January 20, 2013

கடும் நடவடிக்கை- மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு Jaipur ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 20, 1:53 PM IST





ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிந்தனை அமர்வு என்ற பெயரில் 2 நாள் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பின் நேற்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரசின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 3-ம் நாளான இன்று காரிய கமிட்டியின் சிறப்பு கூட்டம் நடந்தது.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி மற்றும் நாடு முழுவதும் இருந்து 1,500 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பிரியங்கா காந்தி அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் ராகுல்காந்தியை துணைத் தலைவராக நியமித்ததற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கட்சியின் முக்கிய குறிக்கோள்கள் அடங்கிய 5 அம்ச தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பிறகு சோனியா காந்தி தொடக்க உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
2 நாள் நடந்த சிந்தனை அமர்வு கூட்டத்தில் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் பற்றி அலசப்பட்டது. நமது நாடு மட்டுமின்றி சர்வதேச அளவிலான முக்கிய பிரச்சினைகளை விவாதிக்கவும் இந்த கூட்டம் ஒரு வாய்ப்பை வழங்கியது.
நாட்டில் ஊழல் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஊழல் நாட்டு மக்கள் அனைவரையும் பாதிக்கிறது. ஊழல் வேரோடு ஒழிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இதுபோன்ற சட்டங்களை உள்ளடக்கிய முக்கிய 5 அம்ச திட்டத்தை தொடங்கி உள்ளோம். இதன்மூலம் ஊழலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்லி கற்பழிப்பு சம்பவத்தில் பலியான மாணவி, பெண்களின் அடையாளமாக உள்ளார். பாலியல் கொடுமைக்கு பலியான அவருக்கு நீதி கிடைக்கும். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவது அடிப்படை உரிமை. பெண்களுக்கு எதிரான கொடுமை களை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். பெண்களுக்கு சமநீதி, அந்தஸ்து வழங்கப்படும். பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். நான் தனிப்பட்ட முறையிலும் இதை வலியுறுத்துவேன்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள நேரடி மானியம் வழங்கும் திட்டத்தால் ஊழல் முற்றிலும் ஒழிந்து போகும். இதன் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள்.
காங்கிரஸ் ஏன் மக்களின் சிறந்த தேர்வாக இருக்கிறது என்பதை நாம் மக்களுக்கு தெளிவாக விளக்கிச் சொல்ல வேண்டும். சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் நமக்கு உண்டு.
பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்காக நாம் பாடுபடுகிறோம். நாட்டின் ஒற்றுமை மற்றும் சீரிய நிலைக்கு எதிரான சக்திகளை அழிக்க நாம் போராட வேண்டும்.
நாட்டில் வறுமையை ஒழிக்க காங்கிரஸ் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 8 1/2 ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறது. செயல்திறன் கொண்டதாக அரசு விளங்குகிறது.
டீசல் விலை உயர்வு, சமையல் கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள், சர்வதேச சந்தை நிலவர மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டது. அதற்கான கட்டாய சூழல் உருவானது. எனவே இதற்கான சரியான காரணத்தை நாம் மக்களிடம் விளக்கி கூற வேண்டும்.
மக்களுக்கு நம் மீது ஒரு உயர்ந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் உள்ளது. அதை ஒருபோதும் வீண் போக நாம் அனுமதிக்கக் கூடாது. நமக்கு ஆதரவு தரும் மக்களின் வாழ்க்கைத்தரம் தாழ்ந்து போகவிடக் கூடாது. மக்களுக்காக நாம் ஒன்றாக உழைத்தால் வரும் 2014 தேர்தலில் நாம் வெல்வது உறுதி.

No comments:

Post a Comment