Sunday, January 20, 2013

ராகுல் தலைமையில் 2014-ல் வெற்றி உறுதி: காங்கிரஸ் தலைவர்கள் கருத்து

ராகுல் தலைமையில் 2014-ல் வெற்றி உறுதி: காங்கிரஸ் தலைவர்கள் கருத்து
ராகுல்...
 
இந்த மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரித்தால்தான் காங்கிரசை காப்பாற்ற முடியும்- மீண்டும் அரியணையில் காங்கிரசை அமர வைக்க முடியும் என்பது கட்சியின் அடிமட்ட தொண்டன் முதல் உயர் மட்ட தலைவர்கள் வரை அத்தனை பேரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.
 
அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ராகுல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சோனியாவின் வழிகாட்டுதலும், ராகுலின் வழி நடத்துதலும் காங்கிரசை வெற்றி வாகை சூட வைக்கும் என்று காங்கிரசார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியதாவது:-
 
கட்சி தலைமை தாமதமாக எடுத்த முடிவாக இருந்தாலும் நல்ல முடிவு. கடந்த 8 வருடங்களாக ராகுலின் செயல்பாட்டை பார்த்து வருகிறோம்.
 
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டு மக்களை ஒன்றாக இணைக்கும் சக்தி நேரு குடும்பத்துக்கு உண்டு. அந்த வழியில் இளம் தலைவராக உருவெடுத்துள்ள ராகுல் காந்தி இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல தகுதியானவர். கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை நேரில் அறிகிறார். இந்தியா முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளை நேரில் அழைத்து பேசி கட்சி தலைவர்களையும், அவர்களின் எண்ண ஓட்டங்களையும் அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்.
 
அவரது உழைப்பால்தான் உத்தரபிரதேசத்தில் 20 எம்.பி. தொகுதிகளை கைப்பற்ற முடிந்தது. அவரது தலைமை கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சியது போல் அமையும். அடுத்த ஆண்டு பொது தேர்தலை சந்திக்க நல்ல ஆரம்பம் இது.
 
2020-ம் ஆண்டில் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 60 சதவீதத்துக்கு மேல் இருப்பார்கள். எனவே இளைஞர் சக்தியால்தான் நாட்டை மேம்படுத்த முடியும். புதிய சிந்தனை உள்ள இளைஞர்கள், புதிய இந்தியாவை காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ராகுல் தலைமையை ஏற்பார்கள்.
 
வருகிற தேர்தலில் எத்தனை கட்சிகள் ஓரணியில் திரண்டாலும் ராகுல் தலைமையில் சந்திக்க முடியும். மக்கள் ஆதரவு பெருகும்.
 
முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன் கூறியதாவது:-
 
ராகுல் காந்தி துணைத் தலைவர் ஆனது இளைஞர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை உறுதிபடுத்தி உள்ளது. ராகுல் காந்தி தனது சகாக்களை நேரடியாக தேர்வு செய்யும் சுதந்திரம் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.
 
புதிய இந்தியாவை படைப்போம் என்ற கோஷத்தோடு பதவி ஏற்றுள்ளார். அவரது வருகை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தொண்டர்களுக்கு உற்சாகத்தை தரும். மக்களுக்கும் காங்கிரஸ் மீது பலமான நம்பிக்கையை கொடுக்கும்.
 
பா.ஜனதா கட்சியினர் போட்டி போட்டு எதிர்க் கிறார்கள். எங்கள் கட்சி விவகாரத்தில் தலையிட அவர்களுக்கு உரிமை இல்லை. எங்களால் எங்கள் தலைவரை அடையாளம் காட்ட முடிந்துள்ளது. அவர் களால் முடியுமா?
 
மோடியை முன்னிலை படுத்துபவர்கள் என்று கூறுகிறார்கள். அவரது மஸ்தான் வேலைகள் குஜராத்துக்கு வெளியே செல்லுபடியாகாது. குஜராத்துக்கு வெளியே அவருக்கு செல்வாக்கு இல்லை.
 
ராகுலின் வருகையால் கட்சியில் மூத்தவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. அவர்களும் ராகுலை தலைவராக ஏற்று கொள்கிறார்கள். ராகுல் இளைஞர்களை முன் எடுத்து சென்றாலும் மூத்தவர்களின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற்று வருகிறார்.
 
காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கோபண்ணா கூறியதாவது:-
 
128 ஆண்டு கால பாரம்பரியம்மிக்க காங்கிரஸ் கட்சிக்கு 42 வயது இளைஞர் துணை தலைவராக பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே கட்சியின் பொது செயலாளராக 8 ஆண்டுகள் பணியாற்றி பயிற்சி பெற்று இப்போது இந்த பதவிக்கு வந்துள்ளார்.
 
ராகுல் வருகையால் வருகிற பொது தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தவும் அமைப்பு ரீதியாக தொண்டர்களை திரட்டவும் முடியும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. 2004 முதல் 2009 வரை ஆட்சியில் இருந்த மதவாத சக்திகள் எப்படி வீழ்த்தப்பட்டதோ அதேபோல் வருகிற தேர்தலிலும் வீழ்த்தப்படும். அதற்கான வியூகங்களை வகுக்கும் கடமை அவருக்கு உள்ளது.
 
ராஜீவ் 41 வயது இளைஞராக இருந்தபோது கட்சியின் பொது செயலாளர் பதவியை ஏற்றார். அதேபோல் ராகுலும் பதவிக்கு வந்துள்ளார். அதற்காக வாரிசு அரசியல் என்று கூற முடியாது. இந்தியாவில் வாரிசு அரசியலை உருவாக்க முடியாது. ஆனால் நேரு குடும்பத்தை நாட்டு மக்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ளார்கள். வாரிசு உருவாக்கப்படவில்லை. ஜனநாயக ரீதியாக தேர்தல் மூலம் மக்களின் வாக்குகளை பெற்று மக்களின் அங்கீகாரத்துடன்தான் பதவிக்கு வர முடிகிறது.
 
நேரு மறைவுக்கு பிறகு லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். அவருக்கு பிறகுதான் இந்திரா பொறுப்புக்கு வந்தார். அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு ராஜீவ் காந்தி வந்தார். அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அரசியல் துறவறம் பூண்டார் சோனியா காந்தி.
 
நேரு குடும்பம் இல்லாத போதுதான் மாற்று கட்சிகள் ஆட்சியை பிடித்தன. சீதாராம் கேசரி தலைவராக இருந்த போது 1998-ல் வகுப்பு வாத கட்சிகள் ஆட்சியை பிடித்தன.
 
அதன் பிறகு தனது கணவரின் லட்சியத்தை நனவாக்க சோனியா அரசியலுக்கு வந்ததும் வகுப்பு வாத ஆட்சி விரட்டியடிக்கப்பட்டது. பல மாநிலங்களில் காங்கிரஸ் பலவீனமாக உள்ளது. மாநில கட்சிக்காக வேகமாக வேரூன்றி வளர்ந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த வலிமைமிக்க தலைவராக ராகுல் இருப்பார். மக்களுக்கு ராகுல் மீது நம்பிக்கை உள்ளது. 

No comments:

Post a Comment