Thursday, August 23, 2012

செல்வாக்கு மிகுந்த பெண்களில் சோனியா 6வது இடம் பிடித்தார்: போர்ப்ஸ் இதழ் பட்டியல் வெளியீடு

நியூயார்க்: உலகிலேயே செல்வாக்குள்ள பெண்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 6வது இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'போர்ப்ஸ்' இதழ், உலகிலேயே செல்வாக்கு, அதிகாரமுள்ள 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 7வது இடத்தை பிடித்திருந்தார். இந்த ஆண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் இதழ் நேற்று வெளியிட்டது. அதல் சோனியா 6வது இடத்தை பிடித்துள்ளார். மேலும், பெப்சி தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி 12வது இடத்தையும், சிஸ்கோ சிஸ்டம்ஸ் தலைவர் பத்மஸ்ரீ வாரியர் 58வது இடத்தையும், ஐசிஐசிஐ வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் 59வது இடத்தையும் பயோகான் நிறுவனர் கிரண் மசூம்தார் 80வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

சோனியா பற்றி குறிப்பிடுகையில், 'காங்கிரஸ் கட்சியின் நீண்ட நாள் தலைவராக சோனியா செயல்பட்டு வருகிறார். உடல்நலக் குறைவால் அறுவை சிகிச்சை செய்த பின்பும், கட்சி மற்றும் அரசு நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்படுகிறார். அசாம் கலவரத்தை திறம்பட கையாண்டது உள்பட பல்வேறு பிரச்னைகளை திறம்பட சமாளிக்கிறார்' என்று கூறியுள்ளது.

செல்வாக்குள்ள பெண்களின் பட்டியலில் தொடர்ந்து 2வது ஆண்டாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரை 'இரும்பு பெண்' என்று போர்ப்ஸ் இதழ் பாராட்டி உள்ளது. 2வது இடத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சின் மனைவி மெலிண்டா கேட்ஸ் 4வது இடத்தையும் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் 7வது இடம் பிடித்துள்ளார்.

No comments:

Post a Comment