Thursday, June 28, 2012

பிரதமர், சோனியா, ராகுல், கூட்டணி கட்சிகள் புடைசூழ வேட்பு மனு தாக்கல் செய்த பிரணாப்!

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸைத் தவிர்த்து காங்கிரஸ் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கூட்டணியில் இல்லாத முலாயம் சிங், லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் புடைசூழ அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திமுக சார்பில் டி.ஆர் பாலு உடனிருந்தார். அதே போல மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் வந்திருந்தார்.
மேலும் தன்னை ஆதரித்து வழிமொழியும் வேட்பு மனு படிவத்தில் முதலாவது கையெழுத்தை பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவிடமிருந்து பிரணாப் முகர்ஜி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வேட்பு மனுவை நாடாளுமன்ற அலுவலகத்தில் உள்ள மாநிலங்களவை செகரட்டரி ஜெனரல் வி.கே. அக்னிஹோத்ரியிடம் இன்று காலை 11 மணிக்கு பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.
ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஜூலை 19ம் தேதி நடக்கவுள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஜூலை 4ம் தேதி கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 22ம் தேதி நடக்கும். அன்றே முடிவுகளும் வெளியாகும்.

No comments:

Post a Comment