Tuesday, February 28, 2012

சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார் சோனியா காந்தி

இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உடல் நலப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவர் வெளிநாடு ஒன்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சை முடிந்து அவர் ஐந்து நாட்களில் டில்லி திரும்புவார் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் திவேதி தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி இந்திய அரசில் எவ்வித பதவியையும் வகிக்கவில்லை என்றாலும், அரசை நடத்துவது அவர்தான் என்ற எண்ணம் நாட்டில் பரவலாக இருக்கிறது.

அதே நேரம் 64 வயதான சோனியா காந்திக்கு என்ன உடல்நலக் குறைவு என்பது குறித்தோ், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவர் எங்குபோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது பற்றியோ தகவல்களை வெளியிட காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மறுத்து வருகிறது. அதே நேரம் அவர் கேன்சர் தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்றதாக ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் தெரிவித்திருந்தன.

இந்தியாவிலேயே நல்ல மருத்துவர்களும் உலகத் தரம் வாய்ந்த வசதிகளும் இருக்கும் நிலையில், சோனியா காந்தி சிகிச்சைக்காக ஏன் வெளிநாடு செல்கிறார் என்ற கேள்வியை சிலர் எழுப்பினர். இந்தியாவில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் அவருக்குத் தேவைப்படும் தனிமை இருக்காது என்ற காரணத்தை வேறுசிலர் கூறுகின்றனர்.