
புதுடில்லி : நாட்டின் அரசியல் களம் ஊழல்வாதிகளால் நிரம்பியிருப்பதாகவும் இதனை ஒழிக்க இளைஞர்கள் மூலம் தான் முடியும் என்றும் இளையதலைமுறையினர் அரசியலில் களம் புக வேண்டும் என்றும் டில்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இளைஞர் காங்., கட்சியின் பொதுசெயலர் ராகுல் பேசினார். டில்லியில் நாடு தழுவிய இளைஞர் காங்கிரசார் பங்கேற்கும் மாநாடு இன்று துவங்கியது .
மாநாட்டில் ராகுல் ஆவேசமாக பேசியதாவது: நமது நாட்டில் அனைவரும் ஊழலைபற்றித்தான் பேசி வருகின்றனர். ஆனால் ஊழல் அரசியல் களத்தில்தான் நிரம்பியிருக்கிறது. பெரும் அளவில் உள்ள இதனை அகற்ற இளைஞர்கள் திரளாக அரசியலில் சேர வேண்டும். இவர்கள்தான் ஊழலை ஒழிக்க முடியும். இதற்கு முன்னோடியாக அகில இந்திய காங்கிரசில் எட்டாயிரம் பேர் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவும் ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தல் மூலமாக. இளைஞர் காங்கிரசார் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை மக்களிடம் சென்று அவர்கள் குறைகளை அறிந்து கொள்வதுடன் அதனை தீர்க்க உழைக்க வேண்டும்.
தற்போது இளைஞர் காங்கிரசில் ஒரு கோடி பேர் தங்களை இணைத்துள்ளனர். நாட்டிலேயே இளைஞர் காங்கிரஸ்தான் பெரும்பாலானவரை கொண்ட அமைப்பாக இருக்கிறது. இன்னும் பெரும் திரளாக இணைந்து அரசியலில் களம் இறங்கி மக்களுக்காக உழைக்க வேண்டும். இதன் மூலம் நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும் என்றார்.