Wednesday, February 16, 2011

கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை-விஜயகாந்த்

மதுரை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

மதுரை திருமங்கலம் அருகே, காங்கேய நத்தத்தில் விஜயகாந்தின் குல தெய்வமான வீர சின்னம்மாள் கோவில் உள்ளது. அரசியலில் முக்கிய முடிவுகளை அவர் எடுக்கும் முன் இங்கு அவர் சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று காலை விஜயகாந்த் தனது மனைவி பிரமேலதா, மகன்களுடன் கோவிலுக்கு வந்தார்.

அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. தரிசனத்தை முடித்துவிட்டு மதுரை புறப்பட்ட அவரிடம் நிருபர்கள், தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று குறித்து கேட்டதற்கு, ஆண்டுக்கு ஒருமுறை குல தெய்வம் கோவிலுக்கு வருவது வழக்கம். அதற்காக தான் வந்தேன். தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முடிவு செய்தால் தெரியப்படுத்துவேன் என்றார்.

பின்னர் திருப்பரங்குன்றம் சென்ற அவர் மாலையில் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

மதுரையில் இருந்தபோது விஜயகாந்தை திமுக தென் மண்டல பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் சார்பில் திமுக மாவட்டச் செயலாளர் சந்தித்துப் பேசியதாகவும், விஜய்காந்தின் இந்த மதுரை பயணத்துக்கு முன்பே அவரது சகோதரியும் கணவரும் அழகிரியை சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக வந்தால் தான் கொஞ்சமாவது வெற்றிக்கு வாய்ப்பு என்ற நிலையில் அதிமுக உள்ள நிலையில் விஜய்காந்தை அழகிரி தரப்பில் சந்தித்து என்ன பேசினர் என்று தெரியவில்லை. இதனால் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்ற கேள்விக் குழப்பம் தொடர்கிறது.

Sunday, February 6, 2011

நடிகர் எஸ்.வி.சேகர் காங்கிரசில் இணைந்தார்

ஜி.கே.வாசன், தங்கபாலு தலைமையில் நடிகர் எஸ்.வி.சேகர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதற்காக டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்து தனது விருப்பத்தை எற்கனவே தெரிவித்திருந்தார்.

மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நடிகர் எஸ்.வி. சேகர். அ.தி.மு.க.வில் ஓரங்கட்டப்பட்டதால் சட்டசபையில் எந்த கட்சியையும் சாராதவராக செயல்பட்டு வந்தார். தி.மு.க., காங்கிரஸ் திட்டங்களை வரவேற்று பேசினார்.

எஸ்.வி. சேகர் இன்று காலை காங்கிரசில் சேர சத்திய மூர்த்தி பவனுக்கு வந்தார். அவருடன் மகன் அஸ்வின் வந்தார். மத்திய மந்திரி ஜி.கே. வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் எஸ்.வி. சேகர் காங்கிரசில் இணைந்தார்.

அவரை சால்வை அணிவித்து அனைவரும் வரவேற்றனர். காங்கிரஸ் உறுப்பினர் கார்டை எஸ்.வி. சேகரிடம் ஜி.கே. வாசன் வழங்கினார். இந்த விழாவில் எஸ்.வி.சேகர் பேசுகையில்,

"பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இங்கு உள்ளது. என்ன பேசினாலும் கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதற்கு எல்லோரும் கட்டுபடுகிறார்கள். இது எனக்கு பிடித்துள்ளது. 2004-ல் புரட்சித்தலைவி என்னை அ.தி.மு.க.வில் அறிமுகப்படுத்தினார். அவரே என்னை கண்டு கொள்ளாமல் வெளியேற்றி விட்டார். அதற்காக நான் வருத்தப்படவில்லை. என்னை கடவுள் பார்த்துக் கொள்வார். நான் எப்போதும் அடுத்தவர்களுக்கு உதவியாகத்தான் இருப்பேன்.

நீங்கள் ஏன் தி.மு.க.வில் சேரவில்லை என்று சிலர் கேட்டார்கள். எனக்கு பிடித்த கட்சி காங்கிரஸ் என்பதால் சேர்ந்திருக்கிறேன். நேற்று கூட காங்கிரசில் சேரும் விஷயத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி, துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நேரில் சென்று சொன்னேன். அவர்களும் வாழ்த்தினார்கள்." என்றார்.